புதன், 15 ஜூன், 2011

ஓவியம் ஆன ஓவியன் - M.F.ஹுசேன்



அரிய கலைஞன் - உலகு
அறிந்த கலைஞன்

வண்ணங்களோடு அவன்  விளையாடினான்
வர்ணம் அவனோடு விளையாடி விட்டது

அவன் விரும்பிப் பார்த்தான் 
தன் தூரிகையை -உலகே  
வியந்து பார்த்தது அவன் ஓவியத்தை

அபார கற்பனைத் திறன்
ஓவியத்தில் வெளிப்பட்டது  - ஆனால்
ஓர்   அபாயத்திரையொன்று  
அவன் வீட்டை முற்றுகை இட்டது

கா"ரணம்"  என்ன?

பாரத  மாதாவை
அவன் தூரிகை துளைத்துவிட்டதாம்
அவள் மேல்
நிர்வாணத்தை பூசிவிட்டதாம்
அதனால் சில இந்து அமைப்புகளுக்குக் 
கூசிவிட்டதாம்

ஓவியனை ஒழித்துவிட
குண்டர்களை ஏவினர்
தொண்டர்களை ஏவினர்

ஒப்பிலாக் கலைஞன்
இருந்தாலும் மானிடன்

  
ஓவியங்களுக்கு உயிரோட்டம் தந்தவன்
தன் உயிர்காக்க  ஓட்டம் கொண்டனன்

மதவெறி  கண்களை  மறைத்தது
மாபெரும் கலைஞனை
நம்மிடமிருந்து பிரித்தது

அந்நிய நாட்டில் அடைக்கலம் புகுந்தவன் 
அங்கேயே மாண்டு போகிறான்
எந்த உரிமையில் நம்மால் சொல்லமுடியும்  இவன்
இந்தியாவின் மைந்தனென்று ?

போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய 
பொக்கிஷம் -

காக்கத்தவறி வாய் 
பொத்திநின்றது அரசாங்கம்
இந்த  அவலம் நடந்ததெதனால்?

பாரத  மாதாவை    
தெய்வமாகப் போற்றுகிறார்களாம்

அவளை அம்மனப்படுத்தியதால்
ஆவேசம் கொண்டார்களாம்

அடப் பதர்களா... 
கோவில்களில்  தெய்வங்களையெல்லாம்
நிர்வாணமாக செதுக்கிவைத்து 
ரசித்துக் கொண்டிருக்கும்  
நீங்களா சொல்வது?

எல்லாக் கோவில்களிலும் 
மூலவிக்ரங்களே - 
அம்மனமாகத்தானே இருக்கிறது?

அபிஷேகம் செய்துவிட்டுத்தானே
ஆடை உடுத்தி  விடுகிறீர்கள்?

அவையெல்லாம் ஆபாசமாகத்
தோன்றாத  உங்களுக்கு -
ஹுசேனின் ஓவியம் மட்டும்
உறுத்தியது எப்படி?

இவன் இந்துவல்ல -
இஸ்லாமியன் என்பதால்தானே?

பாரத மாதா என்ன 
இந்துக்களுக்கு மட்டுமா சொந்தமானவள்?

இந்து முஸ்லிம் கிருத்துவ சீக்கியர் 
அனைவருக்கும் பொதுவானவளல்லவா?

அவளுக்கு எப்படி 
இந்துச் சாயம் பூசப்படுகிறது?

ஜனநாயக  நாட்டில்
ஒவ்வொருவருக்கும் உரிமையா அல்லது
ஒரு மதத்தினருக்கு மட்டும் உரிமையா?

வெட்கப்படுகிறேன் -
என்னை  இந்துமதத்தவள் என்று சொல்லிக்கொள்ள

உயிரோடு உள்ளபோது
தாய்நாட்டில்  வாழ அனுமதிக்காத அரசு
அவர் பிணத்தை தாய் மண்ணில் புதைக்க 
அனுமதிக்கிரதாம்...

தலை கவிழ்த்துக்கொள்ளுங்கள்
இந்தியப் பிரஜைகளே...
அவமான வெளிச்சம் முகத்தில்
அப்பட்டமாகத் தெரிகிறது

இந்த நிகழ்வு -

இந்தியவரலாற்றில்
இனவெறியால்  

இந்துக்கள் தம்முகத்தில் பூசிக்கொண்ட 
இன்னொரு அழுக்கு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக