ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

புலர்காலைப் பொழுது


புலர்கா லைப்பொழு தினிலே பூக்கள் விரிய 

பலநிறங்கள்  சூடிடவே  சோலை  யொருங்கும்
இளங்கதிரின்  வெம்மை யஞ்சியிந் திரன்வோட 
இளங்கன்றும்  தாய் மடியை  எட்டிப்  பிடிக்கும் 

வெளிச் சத்தம்   கேட்டுயிருட்  போர்வை  விலக்கி 
வெளிச் சத்தைப்  பூமகளும்  வாங்கிக்  கொள்வாள் 
கிளிச்சத்தம்  எங்கிருந்தோ  காதில்   கேட்க  
எலிகூட  எதிர்பாடி  கீச்சிட்  டோடும்.

சிலகதிர்கள் வேகமுடன் சீறிவரக் கண்டு 
இலைநுனியை அச்சத்தோடு    யிளம்பனி   பற்றும்
சிறிதாகத் தென்னங்கீற் றுதன்னிலை யசைக்க 
உறக்கம்விட்டு     தேரைகூடத் தன்னிலை மாறும் 

கண்விழித்த குஞ்சுகுயில் கூவத்தொடங் குமதைக் 
கண்டகாக்கை கோபங்கொண்டு கொத்தித் துரத்தும்
கட்டெறும்பு காலைநடை பழகத் தொடங்கும்
விட்டிடாது ஓணானும் தண்டால் எடுக்கும்.

புல்நுனியில் ஏறிவந்த பச்சைப் புழுவும்
பல்பதித்துத் தளிரிலையை உண்ணத் தொடங்கும்
விட்டுவிட்டு பூவைச்சுற் றும்வண்டு கள்கூட  
சொட்டுகின்ற தேனையுண்ண பூக்களைத்  தேடும்.

கிணற்று நீரில்  மீனினமும் கூடிச்  சிரித்து
கணக்கில்லா குட்டிகட்கு நீச்சற்  பழக்கும்
கனக்கின்ற ஓட்டுடனே நத்தையும் நகரும்
கனமில்லா அணிற்பிள்ளை    பற்கள்  கடிக்கும்.

ஒன்றுமுதல் ஐந்தறிவு கொண்டவு   யிர்களெல்லாம்
தொன்றுதொட்ட வாழ்க்கையினைத் தொடர்கிறது இன்றும்
கணினிக்குள் கண்பதித்து உறக்கம்தொலைத் தமனிதன்
மணியடித்ததும் உறங்குகிறான் மறுநாளுமிது  தொடரும் .