வியாழன், 16 ஜூன், 2011

கலைகள் பலவிதம்.


 
கலைகள் பலவிதம். அக்கலைகளைப் படைப்பவன் கலைஞன்.

ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் தத்தம் பாணியில் வெளிப்படுத்தும் அழகுதான் தனிப்பட்ட அக்கலைஞனின் திறமையாக வரையறுக்கப்படுகிறது.
 
ஒரு பெண்ணை கற்பனை செய்யும் போது, ஒரு கவிஞன் தன் எழுத்துக்களால் வர்ணிக்கிறான். ஒரு சிற்பியோ சிலையாகச் செதுக்கி செப்பணிடுகிறான். அதே போலத்தான் ஒரு ஓவியன் தன் தூரிகையால் வடித்துவிடுகிறான்.

கவிஞன் பெண்ணை வர்ணித்த மார்பகங்களோ மறைவிடங்களோ விரசமாகத் தெரியவில்லையாம், சிற்பி செதுக்கிய சிலையில் கொங்கைகளும், இடுப்பும் கலைநயமாகவே தெரிகிறதாம் ஆனால் ஒரு ஓவியன் வரைந்துவிட்ட நிர்வாணம்தான் விரசமாகத் தெரிகிறதாம். என்ன விந்தை இது?

இது தான் நடந்தது இன்று . "ஓவியம் ஆனான் ஓவியன்" என்ற எனது கவிதையைப் படித்துவிட்டு M.F. ஹுசைன் ஐ பாராட்டி எழுதிவிட்டு நான் இந்தியத்தாயின் நிர்வாணத்தை ரசிப்பதாக கூறுகிறார்கள்.

கலையை கலைநயத்தோடு பார்க்கத் தவறிவிட்டு மதச்சாயம் பூசி மெருகேற்றிக் குளிர் காயும் சில சுயநலக் கும்பல்களை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு ஒரு கலைஞனை கேவலப்படுத்துவது எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்ததென நானறியேன்.

M.F. ஹுசேனின் பாரத மாதா ஓவியத்தில் நிர்வாண ஆபாசம் இருப்பதாகக் கூறும் அறிவாளிகளே... சீதாவை பெண்தெய்வமாகப் போற்றும் நீங்கள், அவளை கம்பராமாயணத்தில் கம்பன் வர்ணித்த விதத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? ஆபாசத்தின் உச்சமாக, அருவெறுப்பாக உள்ள கவிதைகளை புனிதமாகக் கொண்டாடுகிறீர்களே இது எந்தவிதமான கலையைச் சேர்ந்து? உங்கள் மூளையில் என்னவிதமான ரசனைக் குறைபாடுள்ளது என சோதித்துப் பாருங்கள்.

கம்பராமாயணத்தில் ஒரு சில பாடல்களிலுள்ள விரசத்தை மட்டும் இங்கு கொடுக்கிறேன். இதுவரை அறியாதவர்கள் அறிந்துகொள்ள....

அறிஞர் அண்ணா எழுதிய கம்பரசத்திலிருந்து சில எடுத்துக்காட்டுகள்...

கம்பன் கற்பனைமட்டுமல்ல எக்ஸ்-ரே உம் எடுக்கிறார் என்கிறார் அண்ணா... எப்படி?

இராமன் வில்லொடித்தது கேட்ட சீதை ..." "இராமனே தனக்கு மணாளன் என்பது உறுதியானது கேட்டு உளம் பூரித்த சீதையின் உணர்ச்சியை விளக்கக் கம்பன் அந்த அம்மையாரின் மறைவிடம் அந்த நேரத்திலே அந்த நினைப்பாலே என்ன நிலை அடைந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டுமா? இராம பிரவாகமோ, பிராட்டியாரின் பெருமையோ அந்த மறைவிடத்தைப்பறிய விளக்கமில்லாவிட்டால் பூர்த்தியாகாதா என்று பக்தர்களைக் கேட்கிறார்

பாடலை உங்களுக்குக் கூறுகிறேன் தீர்ப்பளியுங்கள் தோழர்களே!" - என்கிறார்.

கோமுனியுடன் வருகொண்டலென்றபின்
தாமரைக் கண்ணினாநேன்ற தன்மையா
லாமவனே கொலேன்றைய நீங்கினான்
வாம மேகலையிற வளர்ந்த தல்குலே!

தெரிகிறதா நடந்த விஷயம்? காட்சியை இதோ காணுங்கள்

சேடி: அம்மா, வில்லை ஒடித்தார்!
சீதை: ஒடித்தது யாரடி?
சேடி: அவர்தான் , தேவி!
சீதை: யாரடி , சொல் சீக்கிரம்!
சேடி: சொன்னேனே அம்மா, அவர்தான் ஒடித்தார் ..

இந்த உரையாடல் நடக்கும்போது, சந்தோஷத்தில் சீதை திளைக்க "கலீரெ"ன்று ஒரு சத்தம் கேட்கிறதாம். அந்த சத்தம் கீழே விழுந்த மேகலையின் சத்தமாம். மேகலைஎன்றால் பெண்கள் மறைவிடத்தில் அணியும் அணிகலன்,! ஆனந்தத்தால் அல்குல் வளர, மேகலை அற்றுக் கீழே விழுந்ததாம் ஐயனின் பிராட்டிக்கு, சர்வலோக ரட்சகிக்கு...

இன்னொரு இடத்தில்...

இராமபிரான் தன் மனைவியை வர்ணிக்கிறாராம். இந்த உலகத்திலேயே மதபோதனைக்காக
என்று மக்கள் கொண்டாடப்படும் எந்தக் காவியத்திலும் காணமுடியாததை கம்பராமாயணத்தில் காணலாம் என்கிறார் அண்ணா.

அயோத்தியாக் காண்டம் , சித்திரக் கூடப் படலம் 31 ஆவது செய்யுளின் முதல் அடி:

"பாந்த டேரிவை பழிபடப் பரந்த பேர் அல்குல் ".

அதாவது வனத்தின் வசீகரத்தைக் காட்டிவரும்போது ... ஆசைக்கிளியே அங்கே பார் ஆரணங்கே இங்கே பார் என்று சொல்லாமல் ...

பாந்தள் - பாம் பின் படம் , தேர் - தேர்;
தட்டும்- ஆகியவையும்; பழிபட - உவமையாகாததால் ,
பழிப் புடைய பரந்த - பரவிய அகலமான;
பேர் அல்குல் - பெரிய அல்குல் உடையவளே! இங்கே பாரடி ...
என்று வனத்தின் காட்சிகளைக் காட்டிக்கொண்டு வருகிறாராம் இராமபிரான்.

எனக்குக் குமட்டுகிறது உங்களுக்கு எப்படியோ என்கிறார் அண்ணா.. .

இதைவிடக் கொடுமையாக இன்னொரு எடுத்துக்காட்டும் கூறிவிடுகிறேன்

சீதையைத் தேடி அனுமன் போகையில் அனுமநிடத்தில் சீதையின் அங்க அடையாளங்களை இராமன் கூறுவதாகக் கம்பன் கவிபுனைந்தது இது:

வாராழி கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும், பாந்தழும் பணி வெண் றோங்கும்
ஓராலித் தேறும் கண்ட உனக்கு நான் உரைப்ப தென்ன?

இதன் அர்த்தமோ... என் மனைவியின் மேலிடமும் மறைவிடமும் இவ்விதமாக இருக்கும் என்று கூறி, இன்னின்ன அங்க இலட்சணமுடைய அவளை தேடிக் கண்டுபிடி என்று இராமர் பணிக்கிறார் என கம்பன் வர்ணிக்கிறார் ...

பரிதாபத்திற்குரிய அனுமனின் பாடு எவ்வளவு திண்டாட்டமாக இருந்திருக்கும்? இந்த அங்க லட்சணங்களை உடையவளை ஆராய்ந்து அறிந்து கண்டுபிடிக்க வேண்டுமே ... இப்படி ஏகப்பட்ட ஆபாச அணிவகுப்புகள் கொண்டதுதான் கம்ப இராமாயணம்.

இதையெல்லாம் புனிதமாகப் போற்றும் இவர்கள் ஹுசேனின் நிர்வாண மாதாவிற்கு வக்கிர சாயம் பூசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

பாரத மாதா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவளா என்ன? இந்தியக் குடிமக்களாகிய இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் சீக்கியர் ஆகிய ஒவ்வொருவருக்கும் சொந்தமானவளள்லவா? இதை எப்படி இந்துக்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிக்கொள்கிறார்கள் என்பது தான் புதிராக உள்ளது.

நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், கலைஞன் என்பவன் காலத்திற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டவன். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் எழுத்தோ, சிலையோ, ஓவியமோ... கலைஞனுக்கு ஒன்றுதான்.

அதனால் மூளைமேல் முலாம் பூசியிருக்கும் மதச்சாயத்தைத் துடைத்துவிட்டு கலையை கலையாகப் பாருங்கள் . கலைஞனை அவன் வாழும்
காலத்திலேயே போற்றப் பழகிக் கொள்ளுங்கள்.
 
- லதாராணி பூங்காவனம், குவைத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக