திங்கள், 10 ஜனவரி, 2011

ஆல்போல் வாழு ....?



தழைத்துச்  செழித்து விழுதுகள்  
                  படர்ந்து ஓங்கி  நிற்கிறது
இலைகள் அடர்ந்து கிளைகள்
                  படர்ந்து அழகுடன் மிளிர்கிறது
இலைகள் கடந்து கதிரவன்
                   மண்ணைத் தொடவும் முடிவதில்லை
பூவும் பிஞ்சும் காய்த்துத்
               தொங்கும் குறையும் ஏதுமில்லை


பருவம் வந்தால் பச்சைப்
                   பசுமை கண்களைப் பறித்துவிடும்
பறவை  யினங்கள் பாங்காய்
                   இதன்மேல் கூட்டைக் கட்டிவிடும் 
உதிரும் இலைகள் ஒருநாள்
                   வெற்றுக் கிளைகள் தங்கிவிடும்  
உடனே பறவை இனங்கள்
                எல்லாம் கூடும்  மாற்றிவிடும்  


சிலநாள் கழித்து சிறுசிறு
                துளியாய் பசுமை துளிர்த்துவிடும்
கலகல வென்று இலைகளும்
               வளர்ந்து செழிப்பாய் மாற்றிவிடும்  
இதுவே முறையாய் வருடந்   
               தோரும்  வாழ்க்கை யாகிவிடும்
பொதுவாய் இப்படி  ஆலமரத்தின்  
              கதையும் தொடர்ந்து விடும்

ஒவ்வோர் நாளும்  இலைகள்
                        போலே விழுதும்  வளர்ந்துவிடும்  
அவ்வாறாகத்  தொங்கும் விழுதுகள் 
                       ஓர்நாள் மண்ணை ஊன்றிவிடும் 
தாய்மரம் தளர்ந்து மரிக்கும் 
                    வேளை தாங்கிப் பிடித்துவிடும்  
தங்கள் பலத்தால் தாயை
                 தூண்போல் விழுதுகள் காத்துவிடும்

பொல்லாமர மோதன்றன் கீழேபுற்
              பூண்டுகள்  வளர்வதைத்  தடுத்துவிடும்   
தன்நலம்   கொண்டே தன்வம்சம் 
            மட்டும்  வளர்ந்திடச் செய்துவிடும்
அதனால்ஆ லம்சுயநலம் கொண்டமரமா  
              கத்தான் எனக்குப்  படுகிறது
ஆல்போல் தழைத்து  வாழ்க  
                என்ற வாழ்த்தும்   வெறுக்கிறது!

கிளைகள் அற்ற மரமா
              யிருந்தும் பனையே சிறக்கிறது
தனியா இருந்தும் தன்பயன் 
            அனைத்தும் பிறர்க்குக் கொடுக்கிறது
இனியா வதுநாம் பனைபோல்
             வாழ்கென வாழ்த்தும் சொல்லிடுவோம்
கனிபோ லினித்துப் பலர்க்கும்
               பயனாய் வாழ்ந்திடக் கற்றிடுவோம்!