புதன், 10 பிப்ரவரி, 2010

இதுதான் பாசம்!


கன்னல் கடித்து மகிழ்ந்த களிறு
கன்றின் தாகம் உணர்ந்த பொழுது
தண்ணீர் தேடிகா னகத்தே தன்னிளம்    
கன்றோடு சென்றது  குளமொன்று கண்டு  

அந்தோ அந்தக் குளமும் முன்பு
அமைதியாய் இருந்தது கண்டந்தக் கன்றும்
துள்ளிக் குதித்து தானும் துணையாய்
களிறின் பின்னால் தொடர்ந்தது அழகாய்!

மழையால் நிறைந்த குளத்தின் கரையை
மகிழ்வாய்   சேயுடன் சேர்ந்தே சென்று
நீரினை நன்றாய் உறிஞ்சிட வேண்டி
நீட்டிய  கையை விட்டது நீரில்!

பட்டென  ஏதோ பற்றிடக்  கையை
சட்டென உதறி இழுத்திட முயல
முதலை யொன்றின் பற்களுக் கிடையில்
மாட்டிய நிலையை உணர்ந்தது களிறு!

தப்பிச் செல்லும் எண்ணம் கொண்டு
கப்பென கையை வெளியே இழுக்க
நீரில் முதலை யானையின்  பலத்தோடு
கரையில் யானை  முதலையின் பலத்தோடு 

இங்கு அங்கென  இரண்டும் இழுக்க
ஒன்றும் அறியா கன்றும் விழிக்க
பிளிறிய பிளிரலில் காடும் அதிர்ந்திட
களிறின் வேதனை உணர்ந்தது கன்று!

முடிவில் யானை  முதைலையை இழுத்து
கரையில்  போட்டு தன்னை விடுக்க
துண்டாய்   கையும்   முதலையின் வாய்க்குள்
துடித்துத் துடித்துத்  திரும்பி நடக்க -

அப்பனின் வேதனை பொருக்கா பிள்ளை
குப்புற விழுந்து கோபம் கொண்டு
முதலை மீது புரண்டு தாக்கி
மூச்சை நிறுத்த முயலும் காட்சி!

பாசம் பாசம் இதுதான் பாசம்
மனிதருள் மட்டுமா பெற்றோர் பாசம்?
விலங்குகள் தன்னிலும் வெகுவாய் வுண்டு
விளங்கிடும் யார்க்கும் இவற்றைக் கண்டால்!

பெற்றவர்க் கேதும் ஆபத்து நேரின்
பிள்ளைகள் எப்படி சும்மா இருப்பர்
வீரம் கோபம் வெறித்தன மெல்லாம்
விருட்டென வருதே இதுதான் பாசம்!